பின் தொடர்வோர்

Friday 16 June 2017

318.உரத்துறை

318
வைத்தீசுரன்கோயில்

(புள்ளிருக்கு வேளூர்)
              

  தனத்தன தானத்    தனதான


உரத்துறை போதத்             தனியான
    உனைச்சிறி தோதத்        தெரியாது
மரத்துறை போலுற்          றடியேனும்
     மலத்திருள் மூடிக்       கெடலாமோ
பரத்துறை சீலத்              தவர்வாழ்வே
    பணித்தடி வாழ்வுற்    றருள்வோனே
வரத்துறை நீதர்க்            கொருசேயே
   வயித்திய நாதப்           பெருமாளே


பதம் பிரித்து உரை


உரத்து உறை போத தனியான
உனை சிறிது ஓத தெரியாது
உரத்து உறை – திடம் பொருந்திய
போத - ஞானத்தின்
தனியான - தனிப் பொருளான
உனைச் சிறிது ஓதத் தெரியாத - உன்னைக் கொஞ்சமேனும் போற்றத் தெரியாத

மரத்து உறை போல் உற்று அடியேனும்
மலத்து இருள் மூடி கெடலாமோ
மரத்து உறை போல் உற்று - மரக்கட்டை போல் இருந்து அடியேனும் - அடியேனாகிய நானும்
மலத்து இருள் மூடி - ஆணவம், கன்மம், மாயை என்ற மும்மலங்ளின் இருள் மூடி
கெடலாமோ - கெட்டுப் போகலாமோ?

பரத்து உறை சீலத்தவர் வாழ்வே
பணித்து அடி வாழ்வு உற்று அருள்வோனே
பரத்து உறை - மேலான நிலையில் உள்ள
சீலத்தவர் - புனித வாழ்க்கையர்களின்
வாழ்வே - செல்வமே
பணித்து அடி - உன் திருவடியில் பணிவித்து
வாழ்வுற்று அருள்வோனே - வாழ்வு உறும்படி அருள் செய்பவனே


வரத்து உறை நீதர்க்கு ஒரு சேயே
வயித்திய நாத பெருமாளே


வரத்து உறை - வரந் தரும் வழியையே
நீதர்க்கு - நீதியாகக் கொண்ட சிவபெருமானுடைய
ஒரு - ஒப்பற்ற       சேயே - குழந்தையே
வயித்திய நாதப் பெருமாளே - வைத்தியநாதராகிய சிவபெருமானுக்கு
பெருமாளே - பெருமாளே     


சுருக்க உரை

ஞானத்தின் தனிப் பொருளாகிய உன்னை சிறிதேனும் போற்றத் தெரியாமல் மரக்கட்டை போல இருந்த அடியேனும்f மும்மலங்களின் இருள் மூடிக் கெட்டுப் போகலாமோ?

சீலர்களின் பெரு வாழ்வே, உன் அடியில் பணிவித்து உறும்படி அருள்வாய். வரங்கள் தரும் சிவபெருமானின் குழந்தையாகிய வைத்தியநாதப் பெருமாளே, நான் மும்மலங்களால் மூடப்பட்டுக் கெடலாமோ?


விளக்கக் குறிப்புகள்


மரத்து உறை 
ஊக்கம் ஞானம் இல்லாதவனை (மரக்கட்டை போல் இருப்பவன்)

கவையாகிக் கொம்பாகிக் காட்டகத்தே நிற்கும்
அவையல்ல நல்ல மரங்கள் - சபை நடுவே
நீட்டோலை வாசியா நின்றான் குறிப்பறிய
மாட்டாதவன் நல் மரம்                                                    -- மூதுரை

வரத்துறை நீதர்
வேண்டுவோர் வேண்டுவதே ஈவான் கண்டாய்- 
                                                            - திருநாவுக்கரசர் தேவாரம்

வயித்திய நாத
பவரோக வயித்தி நாத பெருமாளே திருப்புகழ், நிலையாத சமுத்திர
நடம் நவிற்று திறல் வேளூர் வயித்திய நாதனைப் போற்றுதும் 
                                   –முத்துக் குமாரசுவாமிப் பிள்ளைத் தமிழ் காப்பு  

  

No comments:

Post a Comment